இந்தியா

தேக்கடி: கொரோனா காலத்தில் கூண்டோடு கொள்ளைபோன ரிசார்ட்.. பதறிபோன போலீஸ்...!

தேக்கடி: கொரோனா காலத்தில் கூண்டோடு கொள்ளைபோன ரிசார்ட்.. பதறிபோன போலீஸ்...!

kaleelrahman

பாலாவின் ’நந்தா” திரைப்படம் பலரும் பார்த்திருக்கலாம்… படம் பார்க்கவிலையென்றால்… படத்தில் வரும் “லொடுக்கு பாண்டி”யின் நகைச்சுவைக் காட்சியை கட்டாயம் பார்த்திருப்பீங்க. நீதிபதியின் வீட்டை கொள்ளையடித்துவிட்டு பொருட்களை டெம்போவில் ஏற்றி, பக்கத்து வீட்டு மாமியிடம் காஃபி வாங்கி குடித்துவிட்டு செல்லும் காட்சி. அந்த காட்சியை இப்போது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சுவாரஸ்யமான காட்சி.


அப்படி ஒரு வீட்டில் நடந்த கொள்ளையே வயிறு வலிக்கும் நகைப்பை தந்தது என்றால்… அதே பாணியில்… ஒரு ரிசார்ட் முழுவதுமே கொள்ளை போனால் எப்படியிருக்கும்… கொஞ்சம் தேக்கடிக்கு வாங்க…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தேக்கடி. சர்வதேச சுற்றுலா தலமான தேக்கடியில் முக்கிய தொழில் சுற்றுலா. ஆம் சுற்றுலா தொடர்பான தொழில்கள் தான் முதன்மையானது. மன நிம்மதிக்காக சுற்றுலா வரும் பயணிகளுக்கு புதிய அனுபவம் தரும் தங்கும் விடுதிகள், அனைத்து வசதிகளோடும் கண்கவர் கலைப்பொருட்களாலும், மீண்டும் மீண்டும் வந்து தங்கி செல்லும் அளவிற்கு அலங்காரங்களால் இயற்கை சூழலோடு அசத்தலாக இருக்கும்.


அப்படி அசத்தலான ரிசார்ட்தான் தேக்கடியில் அமைந்துள்ள “ஜங்கிள் வில்லேஜ்”. திருவனந்தபுரத்தை சேர்ந்த சாஜன் என்பவருக்கு சொந்தமான ”சாஜ் ஃப்ளைட்” என்ற குழுமத்திற்கு சொந்தமான இந்த ரிசார்ட் மாநிலம் முழுக்க பல இடங்களில் உள்ளன. தேக்கடியில் உள்ள “ஜங்கிள் வில்லேஜ்”… பெயருக்கு ஏற்றவாறு வனத்திற்குள் இருக்கும் சூழலை உருவாக்கும் விதமாக அமைக்கப்பட்டது.


ஒரே வளாகத்திற்குள் இயற்கை எழில் சூழ தனித்தனியே குடில் குடில்களாய் அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் மரங்களால் ஆன அழகுப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டவை. இதுபோன்று 54 அறைகள் உள்ளன. அறைகள் அனைத்திலும் ஏசி வாட்டர் ஹீட்டர், ஃபிரிட்ஜ், கட்டில், மெத்தை, மேஜை என சகல வசதிகளும் உண்டு.


இப்படி இருக்க “சாஜ்” குழுமம் இந்த தேக்கடி “ஜங்கிள் வில்லேஜை" வேறு ஒரு நிர்வாகத்திற்கு குத்தகைக்கு விட்டிருந்தது. குத்தகை காலம் கடந்த ஜனவரியோடு முடிவடைந்த நிலையில் வேறு குத்தகைதாரரை தேடிக்கொண்டிருந்த நேரம் பார்த்து கொரோனா வந்தது. மார்ச் இறுதி வாரம் முதல் சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டன. ரிசார்ட்டுகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடின.


அந்த பட்டியலில் இந்த “ஜங்கிள் வில்லேஜ்” ரிசார்ட்டும் மூடப்பட்டது. இந்த ரிசார்ட்டில் பணியாற்றும் துப்புறவு பணியாளர்களில் துவங்கி மேலாளார் வரையிலான 35 பணியாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. ஆனாலும் பல ஆண்டுகள் ரிசார்ட்டின் வளர்ச்சிக்காக உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் மாதம்தோறும் பாதி சம்பளம் வழங்குவதாக கூறி நிர்வாகம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியது. மேலாளர் மற்றும் இரண்டு பணியாளர்களை, பூட்டிய ரிசார்ட்டை பராமரிக்கவும், பாதுகாக்கவும் பணியமர்த்தியது ரிசார்ட் நிர்வாகம்.


ஆனால் கடந்த ஜனவரியில் துவங்கி ரிசார்ட் இயங்கிய மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்கள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. வேலை செய்ததற்கான சம்பளத்தை கேட்டுப்பார்த்த தொழிலாளர்கள் அலுத்துப்போயுள்ளனர். பணி செய்த காலத்தின் சம்பளமே வராதபோது, கொரோனா காலத்தில் பூட்டப்பட்ட காலத்திற்கு நிர்வாகம் கூறியபடி அரைச்சம்பளம் எங்கே வரப்போகிறது என்று தொழிலாளர்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா ஊரங்கு தளர்வுகளின் அடிப்படையில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதையொட்டி ரிசார்ட்டுகளும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏழு மாதத்திற்குப் பிறகு “ஜங்கிள் வில்லேஜை" ஓராண்டு குத்தகைக்கு எடுக்க ஒரு நிறுவனம் முன் வந்திருக்கிறது.


இதையடுத்து ரிசார்ட்டின் உரிமையாளர் சாஜன் தனது உதவியாளர்களுடன் குத்தகைதாரரையும் ரிசார்ட்டை காண தேக்கடி அழைத்து வந்துள்ளார். வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி என்பதை விட பேரதிர்ச்சி அடைந்தார். ரிசார்ட்டின் பெயர் பலகை துவக்கி, ரிசார்ட்டுக்குள் இருந்த ஒரு பொருளும் இல்லை.


ஒவ்வொரு அறைகளில் இருந்த கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. அறைக்குள் இருந்த கட்டில், மெத்தைகளையும் காணோம். சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள், கேஸ் அடுப்பு என சில்வர் ஸ்பூன் உட்பட அனைத்தும் துடைத்து வாரப்பட்டுள்ளன. மின் விசிறி, வாட்டர் ஹீட்டர் துவங்கி ஏசி வரையிலான அனைத்தும் மிஸ்ஸிங். கூடவே, கொரோனா கால பாதுகாப்பிற்காக பணி நியமனம் செய்யப்பட்ட மேலாளர் மற்றும் அவருடன் இணைந்து பணி செய்ய நியமித்த மற்ற இருவரும் “மிஸ்ஸிங்”.


பதறிப்போன ரிசார்ட் உரிமையாளர் தனது மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை காணோம் என குமுளி போலீசில் புகார் கொடுக்க, பத்து நாட்களில் ரிசார்ட்டின் மேலாளரான ஆலப்புழாவைச் சேர்ந்த ரிதீஷ், தேக்கடியை சேர்ந்த பிரபாகரன், கொல்லம்பட்டறையை சேர்ந்த நீதிராஜா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த மார்ச் முதல் தற்போது வரையிலான பத்து மாதங்களாக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் ஒவ்வொரு பொருளாக கழற்றி விற்றோம் என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். நம்பிக்கைக்குரிய மேலாளர் மற்றும் பணியாளர் இருக்கிறார்கள் என்று உரிமையாளர் மெதப்பில் இருப்பது தவறில்லை; சம்பளம் தந்திருக்க வேண்டும் என்பது போலீசாரின் கருத்தாக உள்ளது. அதற்காக இந்த திருட்டு வேலையும் தவறானது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ரிசார்ட்டின் ஒவ்வொரு பொருளும் பெயர்க்கப்பட்டு லாரிகளிலும், இதர வாகனங்களிலும் கொண்டு செல்லும்போது, அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு ”முதலாளி ரிசார்ட்டை புதுப்பிக்க சொல்லியிருப்பதாகவும், அதற்காக பழைய பொருட்களை எல்லாம் மாற்றுவதாகவும்,” மேலாளர் தெரிவித்திருக்கிறார். பெரிய குழுமம், அதன் மேலாளரே சொல்லும்போது நம்பிவிட்டதாக சுற்றத்தார் தெரிவிக்கின்றனர். கொரோனா முடக்கத்தால், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் தேக்கடி நகரின் வீதிகளும், ஆள் நடமாட்டமில்லாத சூழலும் திருட்டுக்கு நன்றாய் துணை போயிருக்கிறது.


மொத்தத்தில், இங்கு கொள்ளையடிக்கப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எங்கு விற்பனை செய்யப்பட்டன. வேறு எங்காவது ரிசார்ட் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை குமுளி போலீசாரின் விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.