இந்தியா

“மத்திய அரசு திட்டமிட்டே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது”-சஞ்சய் ராவத்

“மத்திய அரசு திட்டமிட்டே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது”-சஞ்சய் ராவத்

EllusamyKarthik

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து எந்த விவாதமும் நடக்கக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார் சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் ராவத். 

“ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட ஆர்வம் காட்டும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தவும், விவாதங்களை எதிர்கொள்ளவும் ஆர்வம் காட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக குளிர்கால கூட்டத்தொடரை திட்டமிட்டே மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதன் மூலம் டெல்லியில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் போராட்டம் குறித்த விவாதத்தையும் மத்திய அரசு தவிர்த்துள்ளது.

பழங்கால பெருமையையும், பல தலைவர்களின் புகழையும் மறக்கடிக்கவே புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்களது பெயரை நிலைநாட்ட ஆளும் கட்சி தலைவர்கள் முயற்சிக்கின்றனர். 

மேலும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலைபோல எதிர்க்கட்சியினரையும் கண்ணியத்துடன் பார்க்கின்ற பக்குவத்தை மோடி மற்றும் சகாக்கள் பெற வேண்டும்” என சிவசேனா கட்சியின் சாமனா பத்திரிகையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.