இந்தியா

எதிர்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முழுவதுமாக முடங்கிய நாடாளுமன்றம்

எதிர்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முழுவதுமாக முடங்கிய நாடாளுமன்றம்

JustinDurai

மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் முடங்கின.

விலைவாசி உயர்வு, கடும் பணவீக்கம் ஆகிய முக்கிய விவகாரங்கள் மீது பிற அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரண்டு வகைகளிலும் கோரிக்கை வைத்தன. இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் தொடர் முழக்கங்களை எழுப்பின. இந்நிலையில் இரண்டு அவைகளும் முதலில் இரண்டு மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமையன்று  இரண்டு அவைகளிலும் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அவைகள் கூடுவதற்கு முன்னரே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தின. மக்களவை கூடியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் விலைவாசி பிரச்சனை தொடர்பான விவாதம் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தின. சபாநாயகர் ஓம் பிர்லா இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். பதாகைகளை ஏந்தி அவர்கள் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர்.


சமீபத்தில் உணவுப் பொருட்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். கேள்வி நேரம் நடத்த முடியாத சூழலில் ஓம் பிர்லா அவையை ஒத்தி வைத்தார்.

மாநிலங்களவையிலும் காலையில் அவை நடவடிக்கைகள் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்ப தொடங்கினர். இதையடுத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையை ஒத்தி வைத்தார்.  இரண்டு மணிக்கு மீண்டும் அவைகள் கூடிய போது இதே நிலை தொடர்ந்ததால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் எந்த விவாதமும் நடைபெறாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளையும் முடக்கின.

இதையும் படிக்கலாம்: நுபுர் சர்மாவின் வீடியோ பார்த்த இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து - பிகாரில் பயங்கரம்