அரசியல் குழப்பத்திற்குப் பெயர் போன கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பத்து முதலமைச்சர்கள் மாறிவிட்டனர்.
கர்நாடகாவில் கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார். நான்கு ஆண்டுகள் 230 நாட்கள் வரை அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடாவுக்கு நண்பரான காங்கிரசின் தரம் சிங் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் திரும்ப பெற்றது. இதனால் தரம் சிங்கின் ஆட்சி 20 மாதங்களில் கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
35 நாட்களில், மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி குமாரசாமி முதல்வராகவும், பாஜகவின் எடியூரப்பா துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். 20 மாதங்கள் குமாரசாமி முதல்வராக இருந்த நிலையில், இரு கட்சிகளும் ஆட்சியை பங்கிட்டுக்கொள்ளும் ஒப்பந்தத்தின் படி பாஜகவின் எடியூரப்பா ஆட்சியமைத்தார். ஆனால் அமைச்சர் பதவிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக குமாரசாமி தனது ஆதரவைத் திரும்ப பெற்றார்.
ஏழு நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பாவின் பதவி பறிபோனதால், மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இம்முறை 191 நாட்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இதையடுத்து 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் 66 நாட்கள் முதல்வராக இருந்த நிலையில் எடியூரப்பா சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி பதவி விலகினார். இதையடுத்து சதானந்த கவுடா கர்நாடகா முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
341 நாட்கள் முதல்வராக இருந்த அவர் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க முடியாததால், ஜகதீஷ் ஷெட்டர் முதல்வராகினார். இவர் 304 நாட்கள் முதல்வராக இருந்த நிலையில் கர்நாடகாவில் அடுத்த தேர்தலே வந்துவிட்டது. அரசியல் குழப்பத்துக்கு இடையே நடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. இம்முறை சித்தராமைய்யா முதல்வராக தேர்வாகி ஐந்து ஆண்டுகள் இரண்டு நாட்கள் முழுமையாக ஆட்சி செய்தார்.
இதையடுத்து 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது. எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் ஆறு நாட்களில் ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் கைகோர்த்த நிலையில் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்