அணுசக்தியில் இயங்கும் அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு உபகரணங்கள் கையாளும் குழுவின் (Defence Acquisition Council) கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது 2700 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இந்திய கடற்படைக்கு புதிதாக 3 பயிற்சி கப்பல்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கி கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்கவேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை பெருக்கி வரும் நிலையில் இந்தியா தனது கடற்படை பலத்தை கூட்டி வருகிறது. ஏற்கனவே 1988 ம் ஆண்டு ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும் 2012ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது. மேலும் இந்த கப்பல்கள் மருத்துவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் அமையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.