ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள கண்ட டோலா கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான தனஞ்ஜெய் குமார். சமையல் கலைஞர். அவருக்கு அவரது மனைவி சோனி ஹெம்ப்ரமை ஆசிரியராக்க வேண்டுமென்ற விருப்பம்.
அதற்காக அவரது மனைவி ‘டிப்ளமோ இன் எஜுகேஷன்’ தேர்வை எழுத வேண்டும். கொரோனா தொற்றினால் அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருந்த சூழலில் அண்மையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக அவரது மனைவியை ஜார்க்கண்டிலிருந்து 1200 கிலோ மீட்டர் தூரமுள்ள குவாலியருக்கு தனஞ்ஜெய் குமார் அழைத்து செல்ல வேண்டியிருந்தது.
‘கொரோனாவினால் பஸ், ட்ரெயின் என அனைத்து விதமான போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் ஸ்கூட்டரிலேயே என் மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்திருந்தேன். முதலில் அதை சொன்ன போது கர்ப்பமாக இருந்ததால் வேண்டாம் என மறுத்தார் என் மனைவி. இருந்தாலும் எனது விடாமுயற்சியால் ஒருவழியாக அதற்கு சம்மதம் கொடுத்தார்.
பின்னர் எங்கள் ஊரிலிருந்து நான்கு மாநிலங்கள் வழியாக குவாலியருக்கு வந்துள்ளோம். எங்களிடம் இருந்த நகையை பத்தாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து இந்த பயணத்தை மேற்கொண்டோம். இதுவரை ஐந்தாயிரம் ரூபாய் செலவாகியள்ளது’ என தனஞ்ஜெய் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த தம்பதியரின் செயலை அறிந்து கொண்ட குவாலியர் மாவட்ட நிர்வாகம் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி உதவி மற்றும் ஊருக்கு திரும்ப செல்வதற்கான மாற்றும் ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.