நடுவானில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணிற்கு பறக்கும் விமானத்திலேயே வெற்றிகரமாக பிரசவம் பார்த்த மருத்துவர் சைலஜாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
பெங்களூருவின் கிளவுட்னைன் குழும மருத்துவமனைகளின் மருத்துவ ஆலோசகரான டாக்டர் சைலாஜா வல்லபனேனி, டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் ஏறியபோது, அது ஒரு வழக்கமான விமானப் பயணம் என்றே நினைத்திருந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நெகிழ்ச்சி பயணமாக இம்முறை அமைந்தது.
அந்த விமானத்தின் நடுப்பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணான மோனிகா என்பவர் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள் வயிற்றில் வலியை உணர்ந்த அவர் விமானப் பணிப்பெணிடம் தனது உடல்நிலையை கூறினார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்து வந்த அறுவை சிகிச்சை நிபுணரான நாகராஜ் அந்த கர்ப்பிணியை சோதனை செய்து கொண்டிருந்தார்.
இருப்பினும், வலி அதிகரித்தவுடன், மோனிகா பதற்றமடைந்து கழிப்பறையை நோக்கி நடந்தாள். அப்போது தான் அங்கிருந்த டாக்டர்.சைலஜா, அந்த பெண்ணிடம் இருந்து வரும் ரத்தப்போக்கை கவனித்த உடனே அவரும் கழிப்பறையை நோக்கி விரைந்தார்.
இதுகுறித்து டாக்டர்.சைலஜா கூறுகையில், ‘’அந்த கர்ப்பிணி பெண், 'நான் சுமார் ஒன்றரை மாத கர்ப்பிணி தான்' என்று என்னிடம் கூறினார். ஆனால் நான் அதை நம்பவில்லை. இது குறைந்தது 32-34 வாரங்கள் இருக்கக்கூடும் என்று உறுதியாக நம்பினேன்.
மோனிகா பிரசவிக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியும். உடனே நான் என்னை பிரசவம் பார்க்க தயாராகிக் கொண்டு, கையுறைகள், பிபிஇ கிட் அணிந்து பணியை தொடங்கினேன். மோனிகா கழிப்பறையின் இருக்கையில் அமர்ந்து அவளது வயிற்றில் அழுத்த தொடங்கினார்.
பின்பு, நானும் அவரது அடிவயிற்றை அழுத்த சிறிது நேரத்திற்குள் தலை வெளியே வந்து குழந்தை பிறந்தது. அதுவொரு ஆண் குழந்தை.
தாயும் குழந்தையும் நன்றாகச் செயல்பட்டு வந்தனர். குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் தாய்க்கும் குழந்தைக்கும் கூடுதல் கவனிப்பு தேவைப்பட்டது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நான் உறுதிசெய்தேன். இது தாயின் கருப்பை சுருங்க உதவியது. தாயும் குழந்தையும் நன்றாக இருந்தனர். விமானி என்னிடம் ஹைதராபாத்தில் விமானத்தை தரையிறக்கம் செய்யட்டுமா என்று கேட்டார். ஆனால் இருவரும் நலமுடன் இயங்கியதை உறுதி செய்த நான், அதற்கு அவசியமில்லை, பெங்களூரை அடையும் வரை குழந்தையும் தாயும் நன்றாக இருப்பார்கள் என்று நான் விமானியிடம் நம்பிக்கை தெரிவித்தேன்.
விமானத்தில் இருந்ததை கொண்டு என்னால் முடிந்ததைச் செய்தேன். தொப்புள் கொடியை வெட்டிய பிறகு நான் நெய்யை பயன்படுத்தினேன். விமான பணிப்பெண்கள், மருத்துவர் நாகராஜ் மற்றும் பயணிகள் என பலரும் எங்களுக்கு உதவினார்கள்.
மோனிகா மன உறுதியுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார். அவர் ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை பிரசவித்ததாக உற்சாகமாக இருந்தார்.
கையுறைகள், முகக் கவசங்கள் தாராளமாக கிடைத்தன. அதற்கு கொரோனாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மோனிகாவின் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ சிறப்பு சலுகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.