உச்ச நீதிமன்ற நீதிபதியாக உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசஃபை நியமிக்குமாறு கொலிஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி நீதிபதி கே.எம்.ஜோசப் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்தது. ஆனால் இதை சட்ட அமைச்சகம் ஏற்றுக் கொள்ளாமல் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி கொலிஜியத்திடம் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி மீண்டும் உச்ச நீதிபதியாக பணியமர்த்தும்படி ஜோசஃப்பின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பதவிக்கு அவர் தகுதியானவர் என்றும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோரது பெயர்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இதற்கும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் 3 முறை பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.