இந்தியா

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 4 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பிய பா.ஜ.க

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 4 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பிய பா.ஜ.க

EllusamyKarthik

உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க-வின் நான்கு எம்.எல்.ஏக்களுக்கு, கட்சியின் நடைமுறைக்கு எதிராக செயல்பட்டதாக அவர்களிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது அம்மாநில பா.ஜ.க. 

இதனை உத்தரகாண்ட் மாநில பிரிவு தலைவர் பன்சிதர் பகத் சனிக்கிழமை தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நான்கு எம்.எல்.ஏக்களில் ஒருவரான துவாரஹத் தொகுதி எம்.எல்.ஏ மகேஷ் நெஜி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

‘கட்சியின் தேசிய துணைத் தலைவரும், உத்தரகாண்ட் பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு மற்றும் இணை பொதுச் செயலாளர் (அமைப்பு) சிவ் பிரகாஷ் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர் மாநில பாஜக தலைமை இந்த முடிவை எடுத்ததுள்ளது’ என தெரிவித்துள்ளார் மாநில பிரிவு தலைவர் பன்சிதர் பகத்.

கடந்த வாரம் டெஹ்ராடூன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எம்.எல்.ஏ மகேஷ் நெஜி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் எம்.எல்.ஏ தான் தனது குழந்தையின் தந்தை என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனையை செய்யவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். தன் மீதான குற்றச்சாட்டை எம்.எல்.ஏ மகேஷ் நெஜி மறுத்திருந்தார்.  

எதிர்க்கட்சியான காங்கிரஸின் கோரிக்கையை அடுத்து ‘டி.என்.ஏ சோதனைக்கு மகேஷ் நெஜி தயாராக இருக்கிறார்’ என தெரிவித்திருந்தார் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்.

மற்ற மூன்று எம்.எல்.ஏக்களில் கான்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ பிரணவ் சிங் வீடியோ ஒன்றில் துப்பாக்கிகளோடு பாடலுக்கு நடனமாடிய காரணத்தினாலும், இரண்டு எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக பொது வெளியில் பேசிய குற்றத்திற்காகவும் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.