புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மற்றும் சில பயங்கரவாத தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பாதுகாப்புப் படையில் முந்தைய தாக்குதலை விட, அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் மீது கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் சிலர் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைமையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை இடைமறித்து கேட்டதில், இந்த சதித்திட்டம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு வெளியே இந்த தாக்குதலை நடத்த அவர்கள் திட்மிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றது.