இந்தியா

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு

webteam

தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்றிக்காய்ச்சலால் இந்தியா முழுவதும் அங்காங்கே மக்கள் பாதிக்கப்பட்டுவந்தனர். ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த அறிக்கையில் இந்திய முழுவதும் 77 பேர் பன்றிக்காயச்சலால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த அறிக்கை இந்தியா முழுவதும் 2500 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது.

பொதுவாக பன்றிக்காய்ச்சல் ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வரை அதிகம் பரவும். இந்நிலையில், இந்தக் கால அளவில், தெலுங்கானாவில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பன்றிக்காய்ச்சல் நோயால் பதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்த அதிக குளிரே காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து ஹைதராபாத் தடுப்பு மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர் “இந்தாண்டு பன்றிக்காய்ச்சலால் அதிக பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அவர்கள் குணமடைந்து வருவதால் பயப்படத் தேவையில்லை. மேலும் குளிர்காலம் முடிவடைய உள்ளதால் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் குறையும். அத்துடன் மக்கள் தங்கள் பங்கிற்கு தற்காப்பு நடவடிக்கைகளான கை கழுவுதல், குளிரிலிருந்து காத்துகொள்ளுதல் போன்றவற்றை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃபுளுவன்சா வைரஸ் மூலம் தாக்கும் நோய். இந்த வைரஸ் பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூக்கில் நீர்வடிதல், உடல்வலி, சோர்வு உள்ளிட்டவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றது.