இந்தியா

கோவில் பூசாரிகளுக்கு இனி அரசு சம்பளம்

கோவில் பூசாரிகளுக்கு இனி அரசு சம்பளம்

rajakannan

கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தூப் தீப் - நைவேத்யம்’ திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு அரசு ஊழியர்களைப் போல் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்பாக மாநிலத்தில் உள்ள 1,805 கோவில்களில் இதே திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.2500 கொடுக்கப்பட்டது. தற்போது, அந்த தொகையை ரூ.6000 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், 3000 ஆயிரம் கோவில்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4,805 கோவில்களில் ‘தூப் தீப் - நைவேத்யம்’ திட்டத்தின் கீழ் அரசு ஊதியம் வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள 83 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள பூசாரிகளுடன் சந்திரசேகர் ராவ் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.