இந்தியா

கொரோனா வார்டில் மனைவி... 5 நாள் குழந்தையுடன் வாசலில் காத்துக்கிடக்கும் தெலங்கானா தொழிலாளி!

கொரோனா வார்டில் மனைவி... 5 நாள் குழந்தையுடன் வாசலில் காத்துக்கிடக்கும் தெலங்கானா தொழிலாளி!

நிவேதா ஜெகராஜா

பிரசவித்த உடனே கொரோனா பாதிப்பு காரணமாக தாய் தனிமைப்படுத்தப்பட, குழந்தையுடன் மருத்துவமனை வாசலிலேயே தொழிலாளி, மனைவியின் வருகையை நோக்கி காத்துக்கிடக்கும் சோக சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

கிருஷ்ணா என்ற அந்த 20 வயது தொழிலாளி, தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் படிக்கட்டுகளில், பிறந்து ஐந்து நாள் மட்டுமே ஆன தனது பெண் குழந்தையை வைத்துக்கொண்டு தனது மனைவி ஆஷாவுக்காக காத்திருக்கிறார்.

அவரின் மனைவி ஆஷா, குழந்தை பிறந்த பிறகு கொரோனாவால் பாதிப்படைந்ததால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே மருத்துவமனையில் ஐந்து நாட்களுக்கு முன்பு குழந்தையை பிரசவித்தார் ஆஷா. அப்போதுதான் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுத்து வருகிறார்கள் மருத்துவர்கள்.

இதனால் பச்சிளம் குழந்தை பிறந்தது முதலே தாயை சேர முடியாமல் இருக்கிறது. இதனையடுத்து தான் மருத்துவமனை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் படிக்கட்டுகளில் குழந்தையுடன் காத்துக்கிடந்து வருகிறார் கிருஷ்ணா. கிருஷ்ணாவின் தாய் தன் மகனுக்கும், மகனின் குழந்தைக்கும் உதவ முன்வந்த நேரத்தில், ஆஷா மருத்துவமனை வார்டுக்கு வெளியே நடந்து செல்வதைக் கண்டிருக்கிறார் கிருஷ்ணா. அதைத்தொடர்ந்து அவர் நலமுடன் விரைவில் வெளியில் வருவார் என்ற நம்பிக்கையில் மருத்துவமனைக்கு வெளியேவே காத்திருப்பது என முடிவு செய்திருக்கிறார் கிருஷ்ணா.

மனைவி விரைவில் குணமாவார் என்ற நம்பிக்கையோடு மட்டுமன்றி, கிருஷ்ணா மருத்துவமனையிலேயே கிடக்க மற்றுமொரு காரணமும் உள்ளது. அது, கிருஷ்ணாவின் சொந்த ஊர் சார்ந்தது. அந்த ஊர், ஹைதராபாத்திலிருந்து 115 கி.மீ தூரத்தில் உள்ள தெலுங்கானாவின் ஜாஹிராபாத் என்ற ஊர். இந்த ஊர், ஆஷா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து அதிக தூரம் என்பதாலும், அந்த கிராமத்துக்கு இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கிறது என்பதாலும் இப்போதைய சூழலில் அங்கு தினமும் சென்று வர முடியாத நிலை உள்ளதாக சொல்கிறார் கிருஷ்ணா. இதன் காரணமாகவும் இங்கேயே இருக்க தீர்மானித்திருக்கிறார் அவர்.

முதலில் மருத்துவமனை அருகில் உள்ள பொதுவிடுதி ஒன்றில் தங்கலாம் என்றால், யாராவது குழந்தையைத் திருடிவிடக்கூடுமாம். அந்த பயத்தினால் காலியாக இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்திலேயே தங்கி வந்திருக்கிறார். இதனை கேள்விப்பட்ட சில தனியார் நிறுவனம் தற்போது அவரையும் அவரின் குழந்தையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

தெலுங்கானாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. அங்கு 4,693 புதிய பாதிப்புகள் நேற்று மட்டும் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,16,404 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் 33 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 2,867 ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.