தெலங்கானாவில் மே 7 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு காலம் முடிவதற்கு முன்பே, ஊரடங்கை நீட்டிக்க அனுமதி கோரி மத்திய அரசிடம் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை வைத்தார்.
அத்துடன் ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தால் நல்லது என மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்திருந்தார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளையும் அவர் விதித்திருந்தார். இந்நிலையில் தெலங்கானாவில் மே 7ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை சந்திரசேகர் ராவ் நீட்டித்துள்ளார்.
அத்துடன் வீடுகளுக்கு அனுப்பப்படும் கொரியர் சேவையை அவர் ரத்து செய்துள்ளார். மேலும், உணவகங்களின் உணவுகளை மக்களுக்கு டெலிவரி செய்யும் சுவிக்கி மற்றும் சொமோட்டோ போன்ற நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளார். கண்காணிப்பு பகுதியில் உள்ள மக்கள் 14 நாட்கள் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் அறிவித்துள்ளார்.