நடிகர்கள் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர், டிக்மான்ஷு துலியா, டினோ மோரியா, குமுத் மிஸ்ரா, மொஹமட் ஜீஷன் அய்யூப், கவுஹர் கான் மற்றும் கிருத்திகா கம்ரா ஆகியோர் நடிப்பில் உருவான ‘Tandav’ வெப் சீரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆனது. அலி அப்பாஸ் ஜாபர் இதை இயக்கி இருந்தார்.
இந்து மத கடவுளை இழிவாக காட்சிப்படுத்தியதாக அந்த வெப் சீரிஸுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமேசான் பிரைம் இந்திய நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பை வட கிழக்கு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், பாஜகவை சேர்ந்தவருமான மனோஜ் கோட்டக் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் இந்து கடவுளை காட்சிப்படுத்தியுள்ள விதம் தங்களது மனதை புண்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் பலர் இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டுமென போராட்டத்திலும் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் காவல் நிலையத்திலும் இது குறித்து புகார் தெரிவித்திருந்தார். அதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், நடிகர்கள் மற்றும் அமேசான் பிரைம் இந்தியா நிறுவனத்தின் மீதும் போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 295A மற்றும் 67A பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.