இந்தியா

விரைவுச் செய்திகள்: சிக்னலில் விதிமீறல் - நோட்டீஸ் | கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி

விரைவுச் செய்திகள்: சிக்னலில் விதிமீறல் - நோட்டீஸ் | கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி

Sinekadhara

கோயில் புறம்போக்கு நிலங்களின் விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷனில் தரமான பொருட்களை வழங்க உத்தரவு: ரேஷன் கடைகளில் தரமாகவும் தங்கு தடையின்றியும் பொருட்களை வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மதுரையில் விற்கப்பட்ட மேலும் ஒரு குழந்தை மீட்பு: மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்கபட்டு, இதயம் அறக்கட்டளையின் காப்பகத்தில் வாங்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிக்னலில் விதிமீறல் - 10,905பேருக்கு நோட்டீஸ்: சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் விதிகளை மீறியதாக 10ஆயிரத்து 905 வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நவீன கேமரா மூலம் கண்காணித்து தானியங்கி முறையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அணை கட்டிய கர்நாடகா - தமிழக விவசாயிகள் கவலை: தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டியதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி, வேலூர் உட்பட 5 மாவட்டங்களுக்கான நீர்வரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடுவர் மன்றம் மூலம் தீர்வு-அமைச்சர் துரைமுருகன்: தென்பெண்ணையின் குறுக்கே கர்நாடகா அணை கட்டிய விவகாரத்திற்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் முதன்முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கொரோனா இறப்புகளை மறைப்பதாக கூறுவது தவறு: கொரோனாவால் ஏற்பட்டுள்ள இறப்புகளை மறைப்பதாக கூறுவது தவறு என மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். பொதுமுடக்கத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்: கோவையில் நள்ளிரவு முதலே காத்திருந்து மக்கள் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது.

5 லட்சத்திற்கு கீழ் குறைந்த சிகிச்சை எண்ணிக்கை: இந்தியாவில் ஒரே நாளில் 44 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாஜக வழக்கு - ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி: நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.

ஜூடோ பயிற்சியாளர் போக்சோ வழக்கில் கைது: பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையிலுள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது போக்சோ வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 19 வயது மாணவி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கெபிராஜ் மீது மேலும் ஒருவர் குற்றச்சாட்டியுள்ளார்.

மாநில அரசுகளுக்கு கிடைக்குமா அதிகாரம்?: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காணும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மீண்டும் வழங்க அரசமைப்பு சட்டதிருத்தம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சர் இன்று தேர்வு: பதவியேற்ற 4 மாதங்களில் உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத் திடீர் ராஜினாமா செய்துள்ளார். புதிய முதலமைச்சரை தேர்வுசெய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

ஜப்பானில் கனமழையால் நிலச்சரிவு: ஜப்பான் நாட்டின் அடாமி பகுதியில் தொடர்மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை நீடிப்பதால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரையிறுதிக்குள் ஸ்பெயின், இத்தாலி: யூரோ கால்பந்து தொடரின் முதல் காலிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தியது ஸ்பெயின். இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியத்தை தோற்கடித்து இத்தாலி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.