இந்தியா

விரைவுச் செய்திகள்: தரமற்ற கட்டட விவகாரம் | தமிழகத்தில் குறையும் கொரோனா | மழைக்கு வாய்ப்பு

விரைவுச் செய்திகள்: தரமற்ற கட்டட விவகாரம் | தமிழகத்தில் குறையும் கொரோனா | மழைக்கு வாய்ப்பு

Sinekadhara

தரமற்ற கட்டடம் - கவன ஈர்ப்பு தீர்மானம்: புதிய தலைமுறை அம்பலப்படுத்திய புளியந்தோப்பு கட்டடத்தின் அவல நிலை குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் விரைவாக கட்டடத்தை கட்டியிருப்பதாக திமுக எம்எல்ஏ பரந்தாமன் புகார் அளித்திருக்கிறார்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை: தரமற்ற கட்டட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார் எனவும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

பள்ளிகள் திறப்பு எப்போது?: ஊரடங்கு நீட்டிப்பில் கூடுதல் தளர்வுகளை வழங்கலாமா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என முதல்வர் ஸ்டாலின் வெள்ளியன்று ஆலோசனை நடத்துகிறார். பள்ளிக்கூடங்கள் மற்றும் திரையரங்குகளை திறப்பது பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆளுநரிடம் ஓபிஎஸ்-இபிஎஸ் புகார்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக அரசு பழிவாங்கும் போக்குடன் நடக்கிறது என ஆளுநரை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் புகார் அளித்திருக்கின்றனர்.

ஆக.31 வரை பயிர்க் காப்பீடு செய்யலாம்: காரீப் பயிர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் இழப்பீட்டு தொகைக்கு 1,250 கோடி ரூபாய் கட்டண மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.

பழைய ஓய்வூதிய திட்டம் - அமைச்சர் விளக்கம்: நிதி நிலைமை மந்த நிலையில் இருப்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்: சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. காணொலியில் நடைபெறும் கூட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநில மொழியில் பதிலளிக்க உத்தரவு: மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் தாய்மொழியில் புரிந்துகொள்ளும்போதுதான் முழுமையடைவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை தள்ளி வைக்கக் கோரியதால் அதிருப்தி அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆக. 23 முதல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற கிளைகள் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தி இருக்கிறார். டெல்லியில் மட்டும் உச்ச நீதிமன்றம் செயல்படுவது அனைவருக்கும் சமநீதி கிடைப்பதை உறுதி செய்யாது என பிரிவுபசார நிகழ்ச்சியில் அவர் கூறியிருக்கிறார்.

அவன் இவன் பட வழக்கு - பாலா விடுவிப்பு: அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றம் இயக்குநர் பாலாவை விடுவித்தது.

தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு: மைசூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்களை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. சென்னையிலுள்ள தொல்லியல் துறை கிளையின் பெயரை தமிழ் கல்வெட்டு இயல் கிளை என மாற்றவும் ஆணையிட்டுள்ளது.

தேர்தல் வன்முறை வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: மேற்குவங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களது கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் கண்ணீர் புகை வீச்சு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதால் கூட்டத்தை கலைக்க அமெரிக்க படையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

ஐபிஎல் - பயிற்சியில் சிஎஸ்கே: ஐபிஎல் தொடருக்காக பயிற்சியை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வெளிநாட்டு வீரர்கள் விரைவில் பயிற்சி முகாமில் இணைகின்றனர்.