சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், “உலக யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதும், இந்தியா முழுவதும், மாநிலம் முழுவதும், கிராமங்கள் பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திலும் கொண்டாடப்படுகிறது. இதற்கு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
யோகா நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. ஒரு வாழ்வியலை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதற்கு இந்த இரண்டும் போதுமானது. அனைவரும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம். புதுச்சேரியை பொருத்தமட்டில் மாநில அரசு இன்று காலை பல இடங்களில் இதனை கொண்டாடுகிறது. புதுச்சேரியில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்கிறேன்.
இன்று மட்டும் யோகா செய்யாமல் வருடம் முழுவதும் யோகா செய்வோம். யோகா செய்வதன் மூலம் கோபம் வராது, பதற்றம் வராது. நாம் நமது பணியை நிறைவாக செய்வதற்கும் யோகா பலன் தரும். அதனால் உலக யோகா தினத்தை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்.
நாம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோமோ அதுபோல இதையும் கொண்டாடும் ஒரு நிலை விரைவில் வரும். யோகாவை பயிற்சி செய்ய, அது மனித குலத்திற்கு எவ்வளவு உதவும் என்பதை அனுபவ ரீதியாக அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் எனது யோகா தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.