இந்தியா

கனடாவில் கத்தியால் குத்தப்பட்ட ‘தமிழ் மாணவி’ - உடனடியாக உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர்

கனடாவில் கத்தியால் குத்தப்பட்ட ‘தமிழ் மாணவி’ - உடனடியாக உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர்

webteam

கனடாவில் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் மாணவியின் குடும்பத்தினருக்கு உடனே உதவ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ராச்சல் ஆல்பெர்ட் (23) என்ற இளம்பெண் கனடாவிற்கு மேல்படிப்பிற்காக சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டொரொண்டோ பகுதியில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் அருகாமையில் நடந்து சென்றுகொண்டிருந்த அப்பெண்ணை, ஒரு நபர் வழி மறித்திருக்கிறார். அத்துடன் தனது கையில் இருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்பெண் அங்கிருந்து தப்பித்து அருகாமையில் உள்ள மருத்துவ மையத்திற்கு சென்றிருக்கிறார்.

உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவ மையம், பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. தற்போது அப்பெண் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக டொரொண்டோ போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய நபரின் அங்க அடையாளம், அணிந்திருந்த உடை மற்றும் அணிகலன்களை பகிர்ந்து, அவர் தொடர்பாக தகவலை தெரிவிக்கும்படி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை ரொனால்ட் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, தனது அன்பிற்குரிய ராச்சலுக்கு உதவி புரிய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை வைத்திருந்தார். அத்துடன் ராச்சலின் குடும்பத்தினர் நீலகிரியில் உள்ள கூனூரில் வசிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைக்கண்ட ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “இந்திய மாணவி ராச்சல், டொரொண்டோவில் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தியை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது குடும்பத்தினருக்கு உடனே விசா கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அப்பெண்ணின் குடும்பத்தினர் உடனே +91 9873983884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.