இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் - தமிழகத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் தேர்தல் - தமிழகத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

சங்கீதா

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி 12-ம் தேதி கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவைச் செயலாளருமான சீனிவாசன் ஆலோசனை மேற்கொண்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் புதன்கிழமை காணொலி காட்சி மூலமாக பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், தேர்தல் அலுவலர்கள், சட்டப்பேரவை செயலக பணியாளர்கள், காவல் துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள், பொதுப்பணி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இவர்கள் தங்களது வாக்குகளை மாநிலத்திலே பதிவு செய்யும் விதமாக சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

மேலும், வாக்குப்பெட்டியை டெல்லியில் இருந்து விமானத்தில் தனி இருக்கையில் எடுத்து வருவதற்காக, வரும் 11-ம் தேதி சட்டப்பேரவை அலுவலர் ஒருவரும், தேர்தல் அலுவலக அலுவலர் ஒருவரும் டெல்லி செல்லவுள்ளனர். இதைத் தொடர்ந்து வாக்குப்பெட்டி பாதுகாப்புடன் 12-ம் தேதி கொண்டு வரப்படும். விமானத்தில் எவ்விதமான பரிசோதனையும் செய்யக்கூடாது என்றும், அதேபோல் பாதுகாப்பாக சி.எஸ்.ஐ. காவலர்கள் கொண்டு வருவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுகள், தமிழ்நாடு அச்சகத்தில் அச்சிடப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலே வாக்களிக்க தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்று இருந்தால், அவர்களுக்கான வாக்குசீட்டுகள் டெல்லி தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்கும். எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வாக்களிப்பர் என்ற விபரம் விரைவில் வெளியிடப்படும். இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் முழு வீச்சில் செய்து வருகிறது.

- எம்.ரமேஷ்