இந்தியா

சர்வதேச ஆசிரியர் விருது பட்டியலில் நடிகை ஸ்வரூப் ராவல்

சர்வதேச ஆசிரியர் விருது பட்டியலில் நடிகை ஸ்வரூப் ராவல்

webteam

நடிகையும் ஆசிரியருமான ஸ்வரூப் ராவல் உட்பட 10 பேர், சர்வதேச ஆசிரியர் விருது இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த, 'வர்க்கி பவுண்டேஷன்' (Varkey Foundation) என்ற அமைப்பு சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை வருடம் தோறும் வழங்கி வருகிறது. இந்த விருது ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை பரிசுத் தொகையாகக் கொண்டது. இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கு 179 நாடுகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகள் வந்தன. இதில், இந்தியாவின் ஸ்வரூப் ராவல் உட்பட 10 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

ஸ்வரூப் ராவல், 1979ம் ஆண்டு 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றவர். உலக அழகிப் போட்டியில் பங்கேற்றவர். தமிழில், வெளியான கமலின் ‘டிக் டிக் டிக்’ படம் இந்தியில் ’கரீஷ்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் ஸ்வரூப். சில இந்தி படங்களிலும் டிவி சீரியலும் நடித்துள்ள இவர், பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவலை திருமணம் செய்துகொண்ட பின், நடிப்பில் இருந்து விலகி கல்வி பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தினார். குஜராத் அரசு மாநில கல்வி திட்டத்துக்கு இவரைத் தேர்வு செய்து நியமித்தது. 

இதுபற்றி ஸ்வரூப் கூறும்போது, ''உலக அளவில் கல்வி சவாலாகவே இருக்கிறது. கல்வியை மேம்படுத்த எடுக்கப்படும் அனைத்து முயற்சிக ளும் பாராட்டப்பட வேண்டும். பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு என் வாழ்த்துகள். அனைத்து பள்ளிகளிலும் வாழ்க்கைத் திறன் கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இது கற்பிக்கப்பட வேண்டும் என்பது என் ஆசை'' என்றார்.