இந்தியா

'மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கு உங்களால் மறுவாழ்வு சாத்தியம்!' - அரசின் செயலி அறிமுகம்

'மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கு உங்களால் மறுவாழ்வு சாத்தியம்!' - அரசின் செயலி அறிமுகம்

webteam

சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோர் குறித்து மக்கள் தகவல் அளித்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில், 'ஸ்வசதா அபியான்' (Swachhata Abhiyan) செல்போன் செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் 'ஸ்வசதா அபியான்' என்னும் கைபேசிச் செயலியை புதுடெல்லியில் இன்று தொடங்கிவைத்தார்.

சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்த நம்பகத் தன்மையான தகவலைத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்வசதா அபியான் (Swachhata Abhiyan) என்ற செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தாவர்சந்த் கெலாட், "சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோர் குறித்து இந்தச் செயலியின் மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம். அதன் மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்கள் வாழ வழி வகை செய்யப்படும். நாட்டு மக்கள் அனைவரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி உரிய தகவல்களை வழங்க வேண்டும்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 9 கோடிக்கும் அதிகமான சுகாதாரமான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் 2013-14-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலமாகவும், 194 மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேசியக் கணக்கெடுப்பின் வாயிலாகவும் 66000-க்கும் அதிகமான மனிதக் கழிவுகளை அகற்றுவோர் கண்டறியப்பட்டுள்ளளனர். அவர்களுக்கு ஏராளமான கடன்களும் மானியங்களும் அளிக்கப்படுகின்றனர். சுகாதாரமற்ற கழிவறைகள், மனிதக் கழிவுகளை அகற்றுவோர் இல்லாத நிலையை விரைவில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது" என்றார்.