இந்தியா

நோயாளி உடலை புழு அரித்த விவகாரம்: மருத்துவர், செவிலியர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

நோயாளி உடலை புழு அரித்த விவகாரம்: மருத்துவர், செவிலியர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

kaleelrahman

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர், செவிலியர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளி புழு அரித்த நிலையில் வீடு திரும்பிய சம்பவத்தில், கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவமனை கொரோனா வார்டு மருத்துவர் அருணா, செவிலியர்கள் லீனா, ரெஜி ஆகியோரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. 

மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, கொரோனா காலத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அளவிடற்கரிய சேவையை கருத்தில் கொண்டும், கொரோனா கால அவசர மருத்துவ சிகிச்சைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியை சேர்ந்தவர் 55 வயது சுனில்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த செப்டம்பர் 6ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. செப்டம்பர் 26ம் தேதி சுனில்குமாருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 


இதைத் தொடர்ந்து வீட்டிற்கு அழைத்து வந்த அவரின் உடல் இழைத்து எலும்பும் தோலுமாக வயிறு ஒட்டிய நிலையில் இருந்துள்ளார். அதோடு கழுத்தின் பின்பாகத்தில் புழு அரித்த நிலையில் இருந்துள்ளது. இது மருத்துவமனையின் கவனக்குறைவு எனவும், அவருக்கு சரியான சிகிச்சையும் உணவும் அளிக்கப்படவில்லை என அவரது மனைவி அனிதாகுமாரி, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவிடம் புகார் செய்தார்.

இதையடுத்து கொரோனா வார்டில் கவனக்குறைவாக, பணியாற்றியதாக மருத்துவர் அருணா, செவிலியர்கள் லீனா மற்றும் ரெஜி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். இதை கண்டித்து திருவனந்தபுரம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கொரோனா காலத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அளவிடற்கரிய சேவையை கருத்தில் கொண்டும், கொரோனா கால அவசர மருத்துவ சிகிச்சைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.