இந்தியா

“நமக்கே இப்படின்னா.. ஏழைகள் என்ன பண்ணுவாங்க?"-அலுவலகத்தை கொரோனா வார்டாக மாற்றிய தொழிலதிபர்

“நமக்கே இப்படின்னா.. ஏழைகள் என்ன பண்ணுவாங்க?"-அலுவலகத்தை கொரோனா வார்டாக மாற்றிய தொழிலதிபர்

EllusamyKarthik

சூரத்தை சேர்ந்த 63 வயதான காதர் ஷைக், கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 

சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்து வரும் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மருத்துவ செலவுக்காக பல லட்சங்களை மருத்துவமனை நிர்வாகத்திற்கு செலுத்தியுள்ளார்.

இந்த சூழலில் ‘பணம் இல்லாதவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ செலவுக்கு என்ன செய்வார்கள்?’ என யோசித்துள்ளார். அவர் வசிக்கின்ற பகுதியில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் நிரம்பி வழிவதாகவும் அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

உடனடியாக சூரத்தின் அடாஜன் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தை 85 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா மருத்துவமனையாக மாற்றி அமைத்தார். அதோடு அது சம்பந்தமான தகவலையும் சூரத் நகர முனிசிபல் கார்பரேஷனுக்கு சொல்லி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளார். அண்மையில் அவர் அமைத்துள்ள மருத்துவமனையை பார்வையிட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் அடுத்த சில நாட்களில் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் கொரோனா பாசிட்டிவ் நபர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

தீவிர சிகிச்சை பிரிவுக்கு என 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்கு வசதியாக தனி அறையையும் ஏற்பாடு அவர் செய்துள்ளார். 

“நான் பிறக்கும்போதே பணக்காரனாக பிறக்கவில்லை. என் வாழ்வின் ஆரம்ப நாட்களில் நிதி சிக்கலை எதிர்கொண்டேன். அதை களைய கஷ்டப்பட்டு உழைத்தேன். இப்போது எனது தேவைக்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது. அதனால் உதவி தேவைப்படுகின்ற மக்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் என்னால் முடிந்ததை செய்வதற்காக அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளேன்” என்கிறார் காதர் ஷைக். அவர் அமைத்துள்ள மருத்துவமனைக்கு அவரது பேத்தி ஹீபாவின் பெயரை வைத்துள்ளார்.