‘கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது’ என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகள் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சரானார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அடுத்த திருப்பமாக பாஜகவோடு, அஜித்பவார் கூட்டணி அமைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் அதிரடியாகத் தெரிவித்தார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக, ‘கட்சியும் குடும்பமும் உடைந்து விட்டது’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகளும் முன்னாள் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.