ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மாநில பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பபி வைக்கலாம். ஆனால், ஒரு மசோதாவை கிடப்பிலேயே வைத்திருக்க முடியாது” என்று நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.
மேலும், “சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக மசோதாவை நிறைவேற்றி அனுப்பப்படும் போது, ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு வாய்ப்பே கிடையாது. மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பபது மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் முடக்குவது போல் ஆகும். சட்டப்பிரிவு 200, ஆளுநர்களுக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருக்கும் அதிகாரத்தை வழங்குகிறது என்றாலும், அந்த சட்டப்பிரிவின்படி சம்பந்தப்பட்ட மசோதாவை மாநில சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் பார்வை.
சட்டமன்றங்களில் சட்டங்களை நிறைவேற்றுவதையோ அல்லது சட்டங்களில் திருத்தம் செய்வதையோ, ஆளுநர்கள் கிடப்பில் வைத்து தடுக்கக்கூடாது” என்றும் உத்தரவில் தெளிவுப்படுத்தியுள்ளது.
‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’யென்று தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வாதத்தை முன்வைத்து வருகிறது.