இந்தியா

பிசிசிஐ தலைவர், செயலாளர் நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிசிசிஐ தலைவர், செயலாளர் நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

webteam

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் செயலாளரை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான லோதா கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்தாததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே நீக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‌70 வயதிற்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகள் பொறுப்பில் இருக்கக்கூடாது, ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்குரிமை மட்டுமே இருக்க வேண்டும் என்ற சில பரிந்துரைகளை ஏற்க பிசிசிஐ தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி, லோதா கமிட்டியின் பரிந்துரை‌ளை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பரிந்துரைகளை அமல்படுத்தாததைத் சுட்டிக்காட்டி, பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் லோதா கமிட்டியின் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் மாநில நிர்வாகிகளும் நீக்கப்படுவர் எ‌னவும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அடுத்ததாக யார் நிர்வகிப்பது என்பது குறித்த ஆலோசனைகளை நீதிமன்றத்திற்கு வழங்க, சொலிசிட்டர் ஜெனரல் பாலி நரிமன், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் ஆகியோரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இதனிடையே, லோதா குழுவின் பரிந்துரை விவகாரத்தில் அரசின் தலையீடு இருக்கிறது என ஐ.சி.சியிடம் இருந்து கடிதம் பெற அனுராக் தாக்கூர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்தக் கடித விவகாரத்தை ‌அவர் மறைத்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து பதில் அளிக்குமாறு அனுராக் தாக்கூருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.