கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 43 நாட்களாக தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான கர்ணன் நேற்று கோவையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கர்ணனை விடுவிக்குமாறு அவரின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கர்ணனை விடுவிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். விடுமுறை காலம் முடிந்து நீதிமன்றம் முழுமையாக செயல்படத் தொடங்கியவுடன் சிறப்பு அமர்வே இது குறித்து முடிவு செய்யும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், உயர் நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார். இதுதொடர்பான வழக்கில், அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவருக்கு மனநல பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது. தனக்கு மனநலப்பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து கர்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறி நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.