மக்களவைத் பொதுத்தேர்தலில் குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 9 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக தலைமயிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி தனித் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து பாஜக தனது 5 ஆண்டு கால ஆட்சியை வரும் மே மாதம் நிறைவு செய்கிறது. எனவே இந்தாண்டு நடைபெறும் மக்களவைத் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி டெல்லி பா.ஜ.க. மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்குவதை தடை செய்யுமாறும் இதனை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறி மனு தாக்கல் செய்தார். மேலும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 8 ஆயிரத்து 63 வேட்பாளர்களில் 1398 பேர் குற்ற வழக்குகளிலும், 889 பேர் கடுமையான வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தொடரப்பட்ட இந்த மனு குறித்து விசாரனையை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்று மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர் நேரடியாக தேர்தல் ஆணையத்தை அணுகுமாறும் தெரிவித்தனர்.