அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் காவல்நிலையங்களில் கைதிகள் அல்லது விசாரணைக்கு அழைத்து வரக்கூடியவர்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை தீவிரமாக கையில் எடுத்த உச்சநீதிமன்றம், அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தும் பணிகளுக்கான பரிந்துரைகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
அதில், அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேச அரசுகள், காவல்நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஜனவரி 27 ஆம் தேதி இந்த வழக்கை ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் எந்தெந்த காவல்நிலையங்களில் எந்தெந்த பணிகளை செய்துள்ளனர் என்பது குறித்தும் தெரிந்துகொள்கிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்
முன்னதாக, இதே வழக்கில் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியதற்கு தமிழக அரசு முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமாராக்கள் பொருத்தியுள்ளோம் எனவும் முக்கியமில்லாத பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வைப்பதில்லை என பதில் அளித்தது. அதற்கு “முக்கியமில்லாத பகுதிகளுக்கு கைதிகளை அழைத்துச்சென்று துன்புறுத்தலாமா” என கிடுக்குப்பிடி கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.