Rahul Gandhi Defamation case pt web
இந்தியா

ராகுல் காந்தியின் மேல்முறையீடு வழக்கு: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தகுதி நீக்க நடவடிக்கை ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டுமென ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Angeshwar G

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடகத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி சமூகத்தை பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Rahul Gandhi

4 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம், ராகுலை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கியது. வழக்கின் தீர்ப்பு காரணமாக ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி ராகுலின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்தார்.

அங்கு இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ‘சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது’ என்று கூறி குஜராத் உயர்நீதிமன்றமும் ராகுல் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதன்பின் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டிருந்தார். அந்த மனுவில் தன்னை தகுதி நீக்கம் செய்ததையும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையும் ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (ஜூலை 21) விசாரிக்கப்பட்டது.

RahulGandhi Defamationcase

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை பி.ஆர்.கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் புகார் கொடுத்த எதிர் மனு தாரர்களுக்கு (குஜராத் அரசு, பூர்னேஷ் மோடி) உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 111 நாட்கள் ஆகும் நிலையில் இதற்கு முன் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் இன்றைய விசாரணையில் இதற்கு முன் வழங்கப்பட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டால் ராகுல் மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் எதிர்தரப்பு தங்களது பதிலை அளிக்க வேண்டும் என கூறியுள்ளதால் அவர்கள் பதிலளித்த பின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.