Tirupati Heart Transplantation PT Desk
இந்தியா

கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்... நெகிழ வைத்த ஊழியர்கள்!

திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது.

PT WEB

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய நல மருத்துவமனையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுவனொருவரின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வேறொரு சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

Sri padmavathi children's heart center

திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அங்கு இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை நேற்று மாலை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவன் ஒருவனின் இதயம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, விசாகப்பட்டின விமான நிலையத்திலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

Sri padmavathi children's heart center

பின் ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட இதயத்தை, கடந்த மூன்று ஆண்டுகளாக இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த சிறுமி ஒருவருக்கு பொறுத்தினர் மருத்துவர்கள்.

Heart transplantation child

இதயத்தை கொண்டு சென்றபோது மழையும் வந்துவிட்டதால், மருத்துவ பணியாளர்களுக்கு அவ்விடத்தில் கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக கொட்டும் மழையில் ஓடோடி வந்து இதயத்தை மருத்துவர்கள் வசம் அவர்கள் ஒப்படைத்தனர்.

Heart transplantation - Tirupati

இக்காட்சிகள், அங்கிருந்தவர்களை நெகிழச்செய்தது. அச்சிறுமி, தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள திருப்பதி மாவட்டம் தடா மண்டலம் ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமியென மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.