இந்தியா

மானை பாதுகாக்க 3500 கி.மீ சைக்கிள் பயணம் - மணிப்பூர் இளைஞர் அசத்தல்

மானை பாதுகாக்க 3500 கி.மீ சைக்கிள் பயணம் - மணிப்பூர் இளைஞர் அசத்தல்

rajakannan

அரிய வகை மான் இனத்தை பாதுகாக்க வலியுறுத்தி மணிப்பூரைச் சேர்ந்த இளைஞர் 3500 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மணிப்பூர் மாநில விலங்காக உள்ளது சங்காய் ரக மான். இந்த மானை பாதுகாக்க வலியுறுத்தி அம்மாநில இளைஞர் ரோஹன் சிங் இந்த சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளார். ரோஹன் சிங் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலப்பாடம் பயின்று வருகிறார். நொய்டாவில் இருந்து கடந்த மாத மத்தியில் இந்த சைக்கிள் பயணத்தை அவர் தொடங்கினார். மணிப்பூர் தலைநகர் இம்பால் வரை இந்த சைக்கிள் பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்காளம், சிக்கிம், அசாம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் வழியாக இறுதியில் மணிப்பூர் சென்றடைய திட்டமிட்டுள்ளார் ரோஹன் சிங். சுமார் 35 நாட்கள் இந்த சைக்கிள் பயணத்தை அவர் செய்கிறார்.

இந்த சைக்கிள் பயணம் குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய தாத்தா சங்காய் மான்களை பாதுகாக்கும் பணிகளில் வனப்பாதுகாவலராக ஏராளமான ஆண்டுகள் இருந்தார். தற்போது, அவருக்கு வயதாகிவிட்டது. ஒரு செய்தித்தாளில், சங்காய் மானை ஒருவர் வேட்டையாடியாக படித்தேன். அப்போதுதான், இந்த முடிவினை எடுத்தேன். என்னுடைய இந்த பயணம் எனது தாத்தாவுக்கு சமர்பணம். 

என்னுடைய இந்த பயணத்தின் போது பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடவுள்ளேன். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு செய்வேன். 5 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதில் இருந்து நான் சைக்கிளிங் செய்து வருகிறேன். இம்பால் நகர் வரை சுமார் 2800 கிலோமீட்டர் பயணம் செய்து மான் பாதுகாப்பு விழிப்புணர்வை முடிக்கிறேன். பின்னர், இம்பாலில் இருந்து கொல்கத்தா வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை வலியுறுத்தி 1700 கிமீ சைக்கிள் பேரணி செல்கிறேன்.” என்றார்.

தலைநர் இம்பாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள கெய்ப்புல் லம்ஜாவ் தேசிய பூங்கவில் 260க்கும் குறைவாகவே சங்காய் மான்கள் உள்ளன. சங்காய் மான் இனத்தை பாதுகாப்பை வலியுறுத்தி மணிப்பூர் அரசு ஆண்டுதோறும் விழிப்புணர்வு திருவிழா கொண்டாடி வருகின்றது.