தெரு நாய்கள் file image
இந்தியா

சத்தீஸ்கரில் தெருநாய்களின் அட்டகாசம் - வெறிநாய் குதறியதில் 5 வயது சிறுமி பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் தெருநாய்கள் தாக்கியதில் 5 வயது சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தில் பய்குந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. 5 வயது சிறுமியான இவர், கடந்த 7ஆம் தேதி காலை 6 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது பைகுந்த்பூரில் உள்ள மார்கதர்ஷன் பள்ளி சாலை அருகே, அங்கிருந்த தெரு நாய்கள் சிறுமியை சூழ்ந்து கொண்டு தாக்கி கடுமையாக கடித்துள்ளன. இதில் சிறுமி கடுமையான காயங்களுக்கு ஆளான நிலையில், தகவல் அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ”நாய்கள் கடுமையாக தாக்கியதில்தான் சிறுமி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது” என பைகுந்த்பூர் கோட்வாலி காவல் நிலைய நிலைய அதிகாரி அஸ்வனி சிங் கூறியுள்ளார். பின்னர், போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் அம்பர்பெட் பகுதியில் பிரதீப் என்ற 5 வயது சிறுவனும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நூராஸ் என்ற சிறுவனும் தெரு நாய் கடித்து இறந்துபோயினர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் தெரு நாய்கள் குழந்தைகளைத் தாக்குவது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகளோ, மத்திய அரசோ தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைவில் ஏதேனும் முடிவெடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.