இந்தியா

காங்கிரஸுக்கு ஆறுதலாக ‘கை’ கொடுத்த மாநிலங்கள்..!

காங்கிரஸுக்கு ஆறுதலாக ‘கை’ கொடுத்த மாநிலங்கள்..!

Rasus

மீண்டும் ஒரு தோல்வியே மிஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அதிகம் கைகொடுத்திருப்பது ஆறுதலாக இருக்கும்.

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் பெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சியை தனியாக எடுத்துக் கொண்டால் அக்கட்சி வெற்றி பெற்றது வெறும் 52 தொகுதிகளில்தான். கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனியாக வெற்றி பெற்றது 41 தொகுதிகளில் மட்டுமே. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் எதிர்க்கட்ச அந்தஸ்தை பெற முடியாமல் போய் விட்டது.

இந்நிலையில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கைகொடுத்திருக்கின்றன. காங்கி‌ரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றுத் தந்திருக்கும் மாநிலம் கேரளா. அங்குள்ள 20 தொகுதிகளில்‌ காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்த இடத்தை தமிழகம் பெற்றுள்ளது.

இங்கு காங்கிரஸ் போட்டியிட்ட 10 தொகுதிகளில் 9-ல் வெற்றி கிடைத்திருக்கிறது. பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ், மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 இடங்களைப் பிடித்திருக்கிறது. பிறகு குறிப்பிட்டு சொல்லுமளவு தெலங்கானாவில் 3, அசாம் 3, சத்தீஸ்கர் 2, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 52 தொகுதிகளில், புதுச்சேரி உட்பட 28 தொகுதிகள் தென்னிந்தியாவில் இருந்து கிடைத்திருக்கின்றன.