இந்தியா

மகாராஷ்டிரா அரசு தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் : ஸ்டாலின்

மகாராஷ்டிரா அரசு தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் : ஸ்டாலின்

webteam

மகாராஷ்டிராவின் புதிய அரசு அங்கு வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். முதல்வராக பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரே, பொதுமக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து நன்றி தெரிவித்தார். 

உத்தவ் தாக்கரேவுடன் சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் ஆகியோர் பதவியேற்றனர். தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்புல் ஆகியோர் பொறுப்பேற்றனர். விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், கபில் சிபல், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் புதிய அரசு அங்கு வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைக்காக பேசுவதில் உத்தவ் நம் அனைவருடன் இணைவார் என்றும் நம்புகிறேன். மகாராஷ்டிரா முதல்வராகியுள்ள உத்தவ் தாக்கரே பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்துகிறேன். எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்குவதில் சரத்பவாரின் நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்மாதிரியாக செயல்படும். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவுக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.