‘காவேரி கூக்குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு தொகை வசூலித்தீர்கள் என்ற தகவலை வெளியிடுமாறு ஈஷா மையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவேரி நதிக்கரையோரம் சுமார் 243 கோடி மரங்களை நடப்போவதாகவும், அதன்மூலம் காவேரி நதி வளப்படும் எனவும் ஈஷா யோகா மையம் அறிவித்தது. இதற்கான ஒவ்வொரு மரத்திற்கு ரூ.43 செலவாகும் எனவும், மக்கள் அதனை வழங்க வேண்டும் எனவும் ஈஷா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்காக ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பேரணி ஒன்றை நடத்தினார். இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணம், விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாகவும், அதன் தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் ஏவி அமர்நாதன் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அபே ஓகா தலைமையிலான அமர்வு, நதிகளுக்காக மரங்களை வளர்ப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல காரியம் தான் என்றும், ஆனால் அதற்காக மக்களிடம் கட்டாயமாக பணம் வசூலிக்கக்கூடாது என்றும் கூறியது. அத்துடன் விவசாயிகளிடமும், மக்களிடமும் வற்புறுத்தி பணம் வசூலிக்கவில்லை என்பதற்கான ஆதாரம் எங்கே எனவும் கேள்வி எழுப்பியது.
அத்துடன் ஈஷா நிறுவனம் சமூகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும், பணத்தை வசூலிக்க மாநில அரசிடமோ அல்லது மத்திய அரசிடமோ அங்கீகாரம் பெறவில்லை எனவும் குறிப்பிட்டது. ஆன்மீக அமைப்புகள் கூட சட்டத்திற்கு கட்டுப்பட்டவை தான் என்றும், ஆன்மீகம் என்பதால் நீங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை என நினைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் ஈஷாவிற்கு நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பணம் வசூலிக்கும் போது கர்நாடக அரசு ஏன் அமைதி காத்தது ? என்றும், இதற்கு யார் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதுமட்டுமின்றி, பணம் வசூலிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ‘காவேரி கூக்குரல்’ மூலம் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்றும், எந்த முறையில் வசூலிக்கப்பட்டது என்றும் ஈஷா அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து, வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.