சத்தீஸ்கரில் மாற்று பாலினத்தவர்கள் வாக்களிக்க வானவில் கருத்துரு கொண்ட வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் மாற்று பாலினத்தவர்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குச் சாவடி உருவாக்கப்பட்டுள்ளது.
வானவில்லின் நிறங்களைக் கொண்ட கூரை மற்றும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ள இந்த சிறப்பு வாக்குச் சாவடியில் அந்தகார் (Antagarh) தொகுதியைச் சேர்ந்த எட்டு திருநங்கைகள் வாக்களிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 69 திருநங்கைகள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். முதற்கட்டத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 5,304 வாக்குச் சாவடிகளில் 200 வாக்குச்சாவடிகள் பெண் அலுவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள வானவில் கருத்துருவிலான வாக்குச்சாவடியில் திருநங்கைகள் மட்டுமின்றி, வயதான பெண்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பாக வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கான்கெர் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குச் சாவடியில் திருநங்கைகள் நான்கு பேர் பாதுகாப்புப் பணியை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.