இந்தியா

பாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைவர் மகனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை

பாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைவர் மகனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை

webteam

பாலியல் புகாரில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மகன் பினாய் கொடியேறி டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன். இவரது மகனான பினாய் கொடியேறி மீது மும்பையை சேர்ந்த 33வயது பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் பினாய் தன்னை ஏமாற்றியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் புகார் தொடர்பாக மும்பை காவல்துறையினர் பினாய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. 

இதனைத் தொடர்ந்து  தன் மீது போடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர் ரத்து செய்யவேண்டும் என்று பினாய் கொடியேறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக பினாய் கொடியேறி டிஎன்.ஏ பரிசோதனை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அவரின் டி.என்.ஏ பரிசோதனை முடிவை சீல் இடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவு அளித்தனர். அத்துடன் இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

முன்னதாக அந்தப் புகாரில் பினாய் 2008ஆம் ஆண்டில் மும்பையில் ஒரு விடுதியில் அப்பெண்னை சந்தித்தாக தெரிவித்துள்ளார். அந்தப் பெண் அவ்விடுதியில் நடனமாடும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். அதற்குப் பின் அப்பெண்னை வேலையை விட்டு வரும்படி பினாய் அழைத்துள்ளார். இதனையடுத்து இருவரும் மும்பையில் வசித்துள்ளனர்.  இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் கடந்த 2010ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பினாய் இடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பினாய் இதை ஏற்க மறுத்துள்ளார்.