தூக்கத்தைக் கெடுக்கும் போது அடித்துக்கொல்லும் கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று மத்திய அமைச்சர் விகே சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.
ஆனால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே விமானப் படையினரின் தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதனையடுத்து 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு பதிலளிக்கும் விதமாக தூக்கத்தைக் கெடுக்கும் போது அடித்துக்கொல்லும் கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று மத்திய அமைச்சர் விகே சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ''அதிகாலை 3.30 மணிக்கு நிறைய கொசுக்கள் வருகின்றன. நான் கொசுக்களை அடித்து கொன்றுவிட்டு நிம்மதியாக தூங்கிகிறேன். அந்த நேரத்தில் நான் இறந்த கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று பேசிய ஹரியானா அமைச்சர் அனில் விஜ், ''அடுத்த முறை இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போது எதிர்க்கட்சியினரை சேர்த்து அனுப்ப வேண்டும். அவர்கள் இறந்த சடலங்களை எண்ணிக்கொண்டு வந்துவிடுவார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.