இந்தியா

ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தி பதாகை: சிவசேனாவுக்குள் உட்கட்சி பூசல்?

ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தி பதாகை: சிவசேனாவுக்குள் உட்கட்சி பூசல்?

webteam

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒரு பகுதியினர் மத்தியில் குரல் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், அங்கு புதிய அரசு அமைவதில் பாரதிய ஜனதா-சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால், அரசு அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்பதில் அக்கட்சி பிடிவாதமாக உள்ள‌தாக தெரிகிறது. இதுபோன்ற சூழலி‌ல், தானே மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்க வேண்டும் என்கிற ரீதியில் சிவசேனா தொண்டர்கள் பதாகைகளை வைத்துள்ளனர். தானே மாவட்டத்தில் செல்வாக்கு படைத்தவராகவும், கட்சியை தனி நபராக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராகவும் விள‌ங்கும் ஷிண்டேவை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்று சிவசேனா தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தேவேந்திர ஃபட்னாவிஸின் அமைச்சரவையில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துவரும் ஷிண்டே, கடந்த 2004 முதல் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் மிகவும் நெருக்கமாக இருந்துவரும் ஏக்நாத் ஷிண்டே, பாரதிய ஜனதாவில் சேரவிருப்பதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.