ஜம்மு- காஷ்மீர் குல்கம் பகுதியில் நடந்த பனிச்சரிவில் ஏழு பேரை காணவில்லை எனத் தெரியவந்துள்ளது.
காஷ்மீர் பகுதிகள் கடந்த சில நாட்களாகவே மிக அதிகமான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. அங்கு இருக்கும் குல்கம் மாவட்டம் பனிப்பொழிவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குல்கம் மாவட்டத்தில் தரையில் இருந்து ஐந்து அடி உயரத்திற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் பகுதிகளில் ஏற்கெனவே பனிச்சரிவுகளை ஆராய்ந்து வரும் அமைப்பு இது குறித்து முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், குல்கம் மாவட்டத்திலுள்ள ஜவகர் சுரங்கப்பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில் 6 காவல்துறையினர், 2 தீயணைப்பு துறையினர் மற்றும் 2 கைதிகள் உட்பட பத்து பேர் சிக்கி காணமல்போய் உள்ளர் எனத் தெரியவந்துள்ளது.
பனிச்சரிவில் காணமல் போனவர்களை மீட்க தேசிய பேரிடர் குழு மற்றும் ஜம்மு- காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியின் மூலம் பனிச்சரிவில் சிக்கி காணமல் போனவர்களில் மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மூவரில் ஒருவர் சிறப்புக் காவல் அதிகாரி குல்சர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏழுபேரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர்.