சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் உயர் அதிகாரிக்கு, இந்திய அதிகாரிகள் கைகுலுக்க மறுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நெதர்லாந்தின் ஹாக்யூ நகரில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் கலந்து கொள்வதற்காக இந்திய, பாகிஸ்தான் அதிகார்கள் பலரும் வந்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற அறையில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான் கைகுலுக்கி வரவேற்றார். அப்போது, இந்தியா தரப்பில் அமர்ந்திருந்த வெளியுறவுத் துறை இணை செயலாளர் தீபக் மிட்டலிடம் கைகுலுக்க தனது கையினை மன்சூர் கான் நீட்டினார். ஆனால், தீபக் மிட்டல் கைகுலுக்க மறுத்து இந்திய பாணியில் கைகளை குவித்து வணக்கம் செய்தார். இதனால், ஒரு நிமிடம் அவர் அதிர்ச்சி அடைந்தார். தீபக் மிட்டலை தொடர்ந்து, நெதர்லாந்து நாட்டிற்கான இந்திய தூதர் வேணு ராஜா மணியும் பாகிஸ்தான் அதிகாரிக்கு கைகுலுக்காமல் வணக்கமே செய்தார்.
இதனையடுத்து, பாகிஸ்தான் அதிகாரிக்கு இந்திய அதிகாரிகள் கைகுலுக்க மறுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தினை பதிவிட்டு பலரும் கருத்து கூறி வருகின்றனர்.