இருபது வாரங்கள் கடந்த கருவை கலைப்பதற்கு சட்டரீதியான அனுமதி வழங்கும் வகையில், கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உடனடியாக உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம் பாலியல் கொடுமை மற்றும் இயற்கைக்கு மாறாக உண்டாகும் கருவை கலைப்பதற்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பான மனுவை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இருபது வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைப்பதற்கு 1971-ல் இயற்றப்பட்ட கருக்கலைப்பு சட்டம் அனுமதி அளித்துள்ளது. அந்த காலத்தை 24 வாரங்களாக நீட்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான மசோதா இதுவரை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.