ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் சுந்தர் போலோ எனும் பயணி ஒருவர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, ரயிலில் பணம் திருடப்பட்ட நிலையில், ரயில்வே சேவையின் குறைபாடே பணம் திருடு போனதற்கு காரணம் எனக்கூறி தன்னிடம் இருந்து திருடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே நிர்வாகம் திரும்ப வழங்க கோரி ரயில் பயணி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்றம், “சேவையை வழங்குபவர்கள் தான் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். எனவே ரயில் பயணத்தின் போது பயனிடமிருந்து திருடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும்” என மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ரயில்வே நிர்வாகம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், ரயில்வே வாரியத்தின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், “ரயில் பயணத்தின் போது பயணிகளின் தனிப்பட்ட உடமைகள் திருடப்படுவது ரயில்வே நிர்வாகத்தின் சேவை குறைபாடு அல்ல. ரயிலில் பயணிக்கும் பயணியால் அவர்களின் உடைமைகளை பாதுகாக்க முடியாவிட்டால், அதற்கு ரயில்வே நிர்வாகம் எப்படி பொறுப்பேற்க முடியும்?” என கேள்வி எழுப்பியது. தொடர்ந்து ரயில் பயணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வழங்க உத்தரவிட்ட மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.