இந்தியா

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு: தீர்ப்பின் விவரம் என்ன? 

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு: தீர்ப்பின் விவரம் என்ன? 

webteam

தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க உத்தரவிடக் கோரி கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது ஜுலை 16 ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் என்ன? எனப் பார்ப்போம்.

சபாநாயகர் பதவி என்பது ஒரு அரசியல் சாசன பதவி. அந்தப் பதவியை வகிப்பவர்களை நீதிமன்றம் தனது உத்தரவுகள் மூலம் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது அல்லது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்களை அவர் செய்யும் பட்சத்தில், அப்போதுதான் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியும். 


இந்த வழக்கில் மேற்கூறிய காரணங்கள் எதுவும் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம்.  மேற்கண்ட சிக்கல்களின் உண்மைகளை வெளிச்சத்தில் வைத்து பார்த்ததில் இந்தப் பிரச்னையின் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்திருக்கிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கும் கேள்விகளாக மட்டுமே இவை உள்ளன.

அரசியல் சாசன சமநிலையை காக்கவும் சம உரிமை விவகாரத்தை நிலைநாட்டவும் இந்த விவகாரம் பார்க்கப்பட்டது. நாளை நடப்பு அரசின் முடிவை தெரிந்து கொள்ளும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான நிகழ்வுகள் கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மேற்கூறிய அரசியல் சாசன சமநிலை மிக அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதற்காக சபாநாயகர் மேற்கூறிய 15 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தின் மீது முடிவெடுக்க முழு அதிகாரம் இருப்பதை உறுதியாகிறது.

அரசியல் சாசன பிரிவு 190 மற்றும் 208 ஆகியவற்றின் கீழ் சபாநாயகரின் முடிவில் தலையிடவோ அவரைக் கட்டுப்படுத்தவோ அவருக்கு அறிவுறுத்தவோ இந்த நீதிமன்றத்தால் இயலாது. எனவே அவர் தனது முடிவை சுதந்திரமாக எடுக்கலாம். எனினும் ராஜினாமா கடிதங்களின் மீது சபாநாயகர் எடுக்கக்கூடிய முடிவுகள் என்ன என்பதை நீதிமன்றத்தின் முன்பாக அவர் தெரிவிக்க  வேண்டும் என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.