மணிப்பூர் வன்முறையில் இரண்டு பழங்குடியின பெண்கள் ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று உச்ச நீதிமன்ற அலுவல்கள் தொடங்கியவுடன் தலைமை நீதிபதி சந்திர சூட், கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “இந்த சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கலவரம் நடக்கும் பகுதிகளில் பெண்களை கருவியாக பயன்படுத்துவது மிகப்பெரிய அரசியல் துஷ்பிரயோகம். வன்முறை தொடர்பாக வெளிவந்துள்ள வீடியோ காட்சிகளை பார்த்து மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிடும்” என எச்சரித்து வழக்கின் விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என அறிவித்தார்.