கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.25 லட்சத்தை கூட்டுறவு வங்கி தராமால் இழுத்தடித்த காரணத்தால், 70 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் வசித்து வந்தவர் பிலோமினா. ஓய்வு பெற்ற செவிலியரான இவர் தனது கணவர் தேவஸ்ஸியுடன் அவ்வூரில் வசித்து வந்தார். இவர் அவ்வூரிலேயே இருந்த மாநில அரசின் கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கியில் தனது சேமிப்பை வெகு நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு உடல்நலக் குறைவுகள் காரணமாக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிலோமினா. அப்போது சிகிச்சைக்காக சேமிப்பு பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முயன்றபோது, அவர்கள் பணத்தை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
நேற்று பிலோமினா சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, அவரது சடலத்துடன் பாஜக மற்றும் அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கணவர் தேவஸ்ஸி, தங்களுடைய ரூ.25 லட்சம் சேமிப்பு பணத்தைத் திருப்பித் தர வங்கி மறுத்ததாகவும், நல்ல சிகிச்சை கிடைத்து இருந்தால் தனது மனைவி பிழைத்திருப்பார் என்றும் குற்றம் சாட்டினார்.
குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள டெபாசிட் தொகையை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.