இந்தியா

ராகுல் நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை - சத்ய பிரதா சாஹூ தகவல்

ராகுல் நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை - சத்ய பிரதா சாஹூ தகவல்

webteam

சென்னை கல்லூரியில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்த போது, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது.

ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடத்த அனுமதித்தது எப்படி என்று விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவு பிறப்பித்திருந்தார். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் இதற்கு எப்படி அனுமதியளிக்கப்பட்டது என்று விசாரிக்குமாறு மண்டல இணை இயக்குனருக்கு அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி குறித்து சில மாதங்களுக்கு முன்னதாகவே, கல்லூரி மாணவிகள் சங்கம் திட்டமிட்டதாக குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அழைக்கப்படாமல், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலே அழைக்கப்பட்டதாகவும், எம்.பி. ஒருவர் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தடை ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கையை சமர்பித்துள்ளார். 

அதில், கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையாக அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை எனவும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.