இந்தியா

இந்திய எல்லையில் சீனா அமைத்துள்ள கிராமம் - சாட்டிலைட்டில் பதிவான புகைப்படம்

இந்திய எல்லையில் சீனா அமைத்துள்ள கிராமம் - சாட்டிலைட்டில் பதிவான புகைப்படம்

Sinekadhara

பூடானுக்கு உட்பட்ட கிழக்குப் பகுதியில் டோக்லாம் பீடபூமிக்கு எதிரே, 2 கிமீக்கும் அதிகமான சுற்றளவில் சீனா ஒரு கிராமத்தையே உருவாக்கி இருப்பதை சாட்டிலைட் துல்லியமாக படம் பிடித்துள்ளது. பூடானுக்கு உட்பட்ட அதே பகுதியில் சீனா கிட்டத்தட்ட 9 கிமீ தூரத்திற்கு சாலையையும் அமைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தப் பகுதி வழியாக சீனா உள்ளே நுழைவதை இந்தியா தடுத்தது. அப்போது சிக்கிம் - டோகாலா எல்லைப் பகுதியில் சீனா சாலை அமைக்க முற்பட்டபோது அந்த திட்டத்தையும் இந்தியா தடுத்து நிறுத்தியது. ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையானது ஜோம்பெல்ரி எல்லைப்பகுதிக்கு செல்ல சீனப்படைகளுக்கு மாற்றுவழியாக இருக்கும் எனநம்பப்படுகிறது.

தற்போது 3 வருடங்களுக்குப் பிறகு, டோர்ஸா ஆற்றங்கரையில் சீனா - பூடான் எல்லையில், சீனா சாலையை அமைத்துள்ளது. இது 2017ஆம் ஆண்டு டோக்லாம் மோதல் நடந்த இடத்திலிருந்து வெறும் 10கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக இந்திய ஆயுதப் படைகளை சீனா எளிதாக கண்காணிக்கமுடியும். தற்போது மக்கள் வசிக்காத கிழக்குப்பகுதியில் சீனா சாலையையும், ஒரு கிராமத்தையும் உருவாக்கியுள்ளது புகைப்படங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

மேலும் சீன பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தற்போது பாங்க்டா கிராமத்தில், நமக்கு நிரந்தமாக தங்கும்பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இது தென் யதோங் நாட்டிலிருந்து 35 கிமீ தூரத்தில் பள்ளத்தாக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் பற்றி மாக்ஸார் கூறுகையில், ஒரு வருடமாக டோர்ஸா ஆற்றங்கரையில், சீனர்கள் கிராமத்தையும், சாலையையும் அமைத்திருப்பது தெளிவாக தெரியவந்துள்ளது. மேலும் புதிய ராணுவ சேமிப்பு பதுங்குக்குழிகளையும் உருவாக்கி வருவதும் தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளது.

சீனப் படைகள் முதன்முறையாக "Chicken's Neck" என்று அழைக்கக்கூடிய இந்தியாவின் முக்கியமான பகுதிகளை தெளிவான கண்காணிக்கக்கூடிய வகையில் தனது படையை நகர்த்தியவண்ணம் உள்ளது.